Old woman passed away sugarcane plantation salem

Advertisment

பள்ளிபாளையம் அருகே, கரும்பு தோட்டத்திற்குள் மூதாட்டி ஒருவரை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தைநெரித்துக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையம் முக்குப்பாறையைச் சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயி. இவர், மார்ச் 19ம்தேதி மாலை தனது கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றார். அப்போது, கரும்பு வயலில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர்.சடலமாகக் கிடந்த மூதாட்டியின் ஆடைகள் அலங்கோலமாகக் கிடந்தது. சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலையுண்ட மூதாட்டி, ஓடப்பள்ளியைச் சேர்ந்த ராமசாமி மனைவி பாவாயி (60) என்பதும், இவருக்கு ஒரு மகள் இருப்பதும் தெரிய வந்தது. பாவாயியின் கணவரும், மகனும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதையடுத்து வயிற்றுப்பிழைப்புக்காக நூறு நாள் வேலைத்திட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நாள்களில் அடுப்பு எரிக்கத் தேவையான காய்ந்த தென்னை மட்டைகள், விறகுகளைச்சேகரிப்பதற்காக அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டங்களுக்குச் செல்வாராம்.

Advertisment

அதன்படி, மார்ச் 19ம் தேதி மாலையில், வழக்கம்போல் அவர் விறகு சேகரிப்பதற்காக விவசாயி சுப்ரமணியின் கரும்பு தோட்டம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், பாவாயியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மூதாட்டியின் கையில் தங்க வளையல்கள் அப்படியே இருந்தன. அதேநேரம், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் காவல்துறையில் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று முக்குப்பாறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்ம நபர்கள் சுற்றித் திரிந்தனரா? பாவாயியை உள்ளூர்க்காரர்கள்யாராவது பின்தொடர்ந்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் முக்குப்பாறை கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.