கழுத்தை நெறித்த திருடனின் கையைக் கடித்த மூதாட்டி! -நகையைப் பறித்தபோது போராடிய துணிச்சல்!

பச்சிளம் குழந்தையின் கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பியபெண்கள், முறத்தால் புலியை விரட்டவும் செய்தனர் என்று தமிழ்ப்பெண்களின் வீரத்தைப் பறைசாற்றுகிறது புறநானூறு. சிறு எறும்புகூட இடையூறு ஏற்படும்போது தன்னைக் காத்துக்கொள்வதற்காகக் கடித்துத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும். சரி, விஷயத்துக்கு வருவோம்!

old woman fights against thief

கடந்த ஆகஸ்டு மாதம் நெல்லை மாவட்டம் கடையத்தில் சண்முகவேல் – செந்தாமரை தம்பதியர், முகமூடி அணிந்து கையில் அரிவாளுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள் இருவரை, முதுமையை ஒரு பொருட்டாக எண்ணாமல் எதிர்த்துச் சண்டையிட்டு விரட்டினார்கள். பிறகு, அந்தக் கொள்ளையர்கள் இருவரும் கைதானார்கள்.

சண்முகவேலும் செந்தாமரையும் தம்பதியர் என்பதால் கொள்ளையர்களுக்கு எதிராக இணைந்து போராடினார்கள். ராஜபாளையம் – சேத்தூரைச் சேர்ந்த சிவகசக்திக்கோ திருடனோடு போராடிய நேரத்தில் உறுதுணையாக வீட்டில் யாரும் இல்லை. கணவர் இறந்துவிட்டார். மகன்கள் மூவரும் பாண்டிச்சேரியில் பணியாற்றுகின்றனர். ஆனாலும், 80 வயதிலும் திருடனோடு போராடியிருக்கிறார் சிவசக்தி. திருடன் தாக்கியதால், தற்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என்ன நடந்தது?

வீட்டில் சிவசக்தி உறங்கிக்கொண்டிருந்தபோது வீடு புகுந்த திருடன், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிப்பதற்காக கழுத்தை நெறித்திருக்கிறான். சிவசக்தி அவனோடு போராடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் திருடனின் கையை பலம்கொண்ட வரைகடித்திருக்கிறார். ஆனாலும், மூதாட்டி என்பதால், நகையைப் பறித்துக்கொண்டு, அவர் பிடியிலிருந்து தப்பிவிட்டான் திருடன். சிவசக்தி அளித்துள்ள புகாரின்அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கும் சேத்தூர் காவல்நிலைய போலீசார், அந்தத் திருடனைத் தேடி வருகின்றனர்.

சேத்தூர் பகுதி மக்களோ, “இங்கே இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால், இன்ஸ்பெக்டர் என்று யாரும் கிடையாது. அடுத்த லிமிட்டில் உள்ள இன்ஸ்பெக்டர்கள்தான் பெயரளவில் வந்து போகிறார்கள். அதனால்தான், கொள்ளையர்களுக்குக் குளிர்விட்டுப் போனது. திருட்டுச் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. காவல்துறை ஓடிவந்து மக்களைக் காப்பாற்றும்; பாதுகாக்கும் என்பதெல்லாம் இங்கே நடக்கின்ற காரியமாகத் தெரியவில்லை. எங்களை நாங்களேதான் காத்துக்கொள்ள வேண்டும். சிவசக்தி போல, திருடனிடம் அடிவாங்க வேண்டும். உடமையைப் பறிகொடுக்க வேண்டும்.” என்று புலம்புகின்றனர்.

Rajapalayam thief
இதையும் படியுங்கள்
Subscribe