Skip to main content

ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு; பதறிப் போன அலுவலர்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 old woman came file petition Coimbatore Collector office fainted and fell down

வருடத்தின் அனைத்து மாதங்களும், வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

அப்போது, கோவை ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரும் சென்றுள்ளார். இவருக்கு 81 வயது ஆகிறது. கணவனை இழந்த இந்த மூதாட்டி கடந்த சில ஆண்டுகளாகக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தியுள்ளார். ஆனால், தற்போது அவரால் வயது மூப்பின் காரணமாக வேலைக்குச் செல்ல இயலவில்லை. இதனால், மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் செய்வதறியாமல் தவித்த மூதாட்டி ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்துள்ளார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்து மனுக்களைப் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், ஓரமாக அமர்ந்திருந்த மூதாட்டி திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் என அனைவரும் ஓடி வந்து மூதாட்டியை தூக்கி அமர வைத்துள்ளனர். அப்போது, மூதாட்டி சரியாக உட்கார முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். அதன் பிறகு அவரைத் தனியாக அழைத்துச் சென்று காற்றோட்டமான இடத்தில் அமர வைத்து தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்னர், மயக்கம் ஓரளவு தெளிந்த நிலையில் சாப்பிடாமல் வந்திருப்பார் என நினைத்து சாப்பிட ஏதாவது வேண்டுமா... என விசாரித்துள்ளனர். ஆனால் மூதாட்டியோ தான் காலையில் சாப்பிட்டுத்தான் வந்ததாக கூறியிருக்கிறார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதற்கிடையில், மூதாட்டியிடம் இருந்து அவரின் உறவினர் ஒருவரின் செல்போன் நம்பரைப் பெற்று, அவருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரின் உறவினர்களும் மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரின் கையில் வைத்திருந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இது குறித்து ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்து அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்று மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்கும்போது, ‘முதியோர், விதவைகள், ஆதரவில்லாத பெண்கள், திருமணமாகாத மகளிர் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு உதவும் பொருட்டு அவர்கள் தங்களது சிறு சிறு பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதந்தோறும் அரசு தரப்பில் உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதிகள் இருந்தும் உதவியைப் பெற முடியாமல், ஏதோ ஒரு காரணத்தால் சிலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு, இவ்வாறு கிடைக்கக் கூடிய உதவித் தொகையை எப்படி பெறுவது என்ற விபரம் கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதன் பின்னர், வேறு வழியின்றி இதுபோன்று நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களில் கலந்துகொண்டு மனு கொடுக்க வருகின்றனர்.

இவ்வாறு நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, இதுபோன்று வயதானவர்கள் அல்லது உடல் நிலை பாதிப்போடு வருகின்றவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தேடிச் சென்று மனுவை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் அவர்கள் மறுபடியும் இங்கு வராத அளவிற்கு உடனே அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்கச் சென்ற மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்