
கரூர் மாவட்டம் அருகே உள்ள முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யர். இவரது மனைவி அண்ணாச்சி(76). கடந்த மாதம் 25ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. அதையடுத்து மூதாட்டி அண்ணாச்சியை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தனது தாயை காணவில்லை என குளித்தலை காவல் நிலையத்தில் அவரது மகன் தமிழ்ச்செல்வன் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவருடைய மனைவி சத்யா, அவருடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மகன், ஆகியோர் மூதாட்டி அண்ணாச்சியை அவர்களது வீட்டிற்கு அழைத்து நகைக்காக கழுத்தை நெறித்துக் கொன்றது தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை கழட்டிவிட்டு அவரது உடலை சாக்கில் மூட்டையாக கட்டி அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் உதவியுடன் திருச்சி மாவட்டம் ஜியபுரம் பகுதியில் காவிரி ஆற்றுப்படுகையில் வீசியுள்ளனர். மேலும் அண்ணாச்சி அணிந்திருந்த தங்கச் சங்கிலி சிலவற்றை பெட்டவாய்த்தலை நகை கடையில் அடகு வைத்து பணம் வாங்கியுள்ளனர். கொலை நடந்த வீட்டின் பின்புறத்தில் கொள்ளையடித்த தங்க நகைகளை குழிதோண்டிப் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த தங்க நகைகளை குளித்தலை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பிணத்தை வீசியதாக சொல்லப்படும் இடத்தில், ஜீயபுரம் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக மூதாட்டியின் உடலை தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளிப்பதற்காக காவிரி படித்துறை அருகே சென்றனர். அப்போது சாக்கு மூட்டை ஒன்று செடி கொடிகளில் சிக்கி இருப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் அதுகுறித்து ஜீயபுரம் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது மூதாட்டி அண்ணாச்சி உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் கடந்த 19 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.