The old man who made the request! Collector who sent home a copy of the order!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரதைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(75). இவரது மனைவி சாந்தகுமாரி(65). இவர்களின் மகள் தேவசேனா(40). இவர்கள் மூவரும் 23ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர் பொதுமேலாளர் சுந்தரராஜன், அந்த தம்பதியிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

அவரிடம் முதியவர் ராஜமாணிக்கம், “எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எங்களுக்கு சொந்தமான நிலம் நல்லாம்பாளையம் கிராமத்தில் பல ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை எனது மகன் பிரபாகரனுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நான் தான செட்டில்மென்ட் மூலம் முழுவதுமாக எழுதிக் கொடுத்துள்ளேன். நிலத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவர் எங்களை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். கடந்த ஓராண்டாக எங்களை அவர் கவனிப்பதில்லை. வந்து பார்ப்பதுமில்லை. சாப்பாட்டிற்கும் மருத்துவச் செலவிற்கும் தவிக்கிறோம். இந்த வயதான காலத்தில் வேலை செய்து உழைத்து சம்பாதிக்கக்கூடிய அளவுக்கு எங்களுக்கு உடலில் தெம்பில்லை. எனவே, நான் எனது மகன் பெயருக்கு தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில் இரண்டு ஏக்கரை மட்டும் எங்களிடம் திருப்பிக் கொடுத்தால் போதும். அதைக்கொண்டு நான், எனது மனைவி, மகள் மூவரும் வாழ்ந்து கொள்கிறோம். இதுதொடர்பாக கடந்த ஒரு ஆண்டாக கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடமும் மனு கொடுத்துள்ளேன். ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து வருவாய்த் துறை அலுவலர் சுந்தர்ராஜன், விரைவில் உங்களுக்கு உங்கள் மகனிடம் இருந்து நிலத்தை எடுத்துக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் அவர்கள் மூவரும் இரவு 11 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், ராஜமாணிக்கத்தின் மகன் பிரபாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார். அதற்கு பிரபாகரன்பதில் அளித்திருந்தார். அதில், அவர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி முதியோர்களை பராமரிக்காத காரணத்தால் தமிழக அரசு 2007 ஆண்டு சட்டத்தின்படி அந்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர், அந்த ரத்து உத்தரவை பத்திர பதிவு செய்த அன்னியூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி, உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். மேலும், அதற்கான நகலை மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட முதியவர் ராஜமாணிக்கத்திற்கும் வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை பெரியவர் ராஜமாணிக்கத்திட்டம் அதிகாரிகள் கொடுத்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு முதியவர் ராஜமாணிக்கம் நன்றி தெரிவித்தார்.