ADVERTISEMENT

10 கிலோ எடையுள்ள மனுக்களுடன் அலையும் முதியவர்... பல ஆண்டுகளாக தலையில் சுமக்கும் அவலம்!

11:22 PM Sep 20, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் அய்யாசாமி (வயது 70). இவருக்கு சொந்தமான 3 1/4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதற்காக முதியவர் அய்யாசாமி கடந்த 15 ஆண்டு காலமாக நிலத்தை மீட்பதற்காக போராடிய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு முதியவர் அய்யாசாமிக்கு சாதகமாக வந்துள்ளது.

இந்நிலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தபோது, தனக்கு சொத்து வேண்டாம் என அய்யாசாமியின் தம்பி கூறிவிட்டு சென்றதாக முதியவர் தெரிவிக்கிறார். பின்னர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு, அய்யாசாமிக்கு சாதகமாக வந்த பின்பு, அவரது தம்பி தங்கராசு, 3 1/4 நிலத்தை பயிர் செய்ய விடாமல் மிரட்டுவதாக அய்யாசாமி தெரிவிக்கிறார். இந்நிலையில் தனது சொத்தை மீட்பதற்காக பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கு மனுகொடுத்து வந்துள்ளார். ஆனால் நிரந்தர தீர்வு எட்டப்படாததால் சுமார் பத்து கிலோ எடை கொண்ட, புகார் மனுக்களை துணியால் கட்டி, தலையில் சுமந்து கொண்டு, அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார்.

விடாமுயற்சியாக 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் 70 வயது முதியவர் அய்யாசாமி ஏறாத அரசு அலுவலகங்களே இல்லை என்றும், நீதிமன்ற வாசல் வரை சென்று உத்தரவு வாங்கியும், அவரது சொத்தை மீட்டு தர அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டும், புகார் மனுக்களை தலையில் சுமந்து கொண்டும் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் அய்யாசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

தள்ளாத வயதிலும் தளராத போராடும் எளிய மனிதரின் குரல் அரசு இயந்திரங்களின் காதுகளுக்கு எட்டுமா..?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT