திருச்சி மாவட்டம், வையம்பட்டி சீதப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(60). இவர், அதே பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அமைந்துள்ள கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுது நீக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அவருக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.