
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ளது சாமூவேல் நகர். இந்தப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சாலையில் கருவாடு விற்றுக்கொண்டுவந்துள்ளார். அப்போது திடீரென அவர் சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அந்தப் பக்கம் சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வேகமாக ஓடிச்சென்று பார்த்தனர். அவரது நாடித் துடிப்பும் மூச்சுக்காற்றும் நின்றிருந்தது. அவர் உயிரிழந்திருந்தது உறுதியாக தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த கடைக்காரர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல், அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் மூலமாக குடும்பத்துக்கும் தகவல் கூறியுள்ளனர். இறந்த முதியவர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது.
இறந்த முதியோர் உறவினர்கள் வருவதற்கும், காவல்துறையினர் வருவதற்கும் இரண்டு மணி நேரம் தாமதமானது. மேலும், திடீரென மழை வந்தது. இதனால் இறந்த முதியவரின் சடலம் மழையில் நனைந்தபடியே இருந்துள்ளது. தாமதமாக வந்த காவல்துறையினரின் விசாரணையில், விற்பனையின்போது சாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.