திருச்சி, மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்பெயிண்டர் சீனிவாசன் (50). இவருக்கு திருமணம் ஆகாததால் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களாகஇவருக்கு பக்கவாத நோய் இருந்துவந்துள்ளது. இதனால் இவருக்கு அவருடைய அக்கா, அண்ணன் மற்றும் நண்பர்கள் உதவி செய்துவந்துள்ளனர். சீனிவாசன் கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவருடைய நண்பர் சின்னப்பா என்பவர் உணவு கொடுப்பதற்காக சீனிவாசனின் வீட்டிற்கு வந்துள்ளார்.
நீண்ட நேரமாக கூப்பிட்டும் சீனிவாசன் கதவைத் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக கூப்பிடலாம் என்று சென்றபோது ஜன்னல் வழியாக துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக இது குறித்து பொன்மலை போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பொன்மலை போலீசார் அழுகிய நிலையில் இருந்த சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சீனிவாசன் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாராஅல்லது அவர் மரணத்திற்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.