/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1492.jpg)
எத்தனை வசதியிருந்தாலும்,‘கல்யாண வீட்டுச் சாப்பாட்டு ருசியே தனிதான்’ என்று பந்தியில் அமர்ந்து சாப்பிட விரும்புபவர்கள்அனேகம்பேர். அதேபோல், கோவில் விருந்துகளில் சாப்பிடுவதும், பலருக்கும் பிடித்தமானது.
விருதுநகர் மாவட்டத்துக்காரரான 62 வயதைக் கடந்த அழகிரிசாமிக்கும், அப்படி ஒரு ஆசை வந்தது. இத்தனைக்கும் அவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடந்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது கைப்பையில் சுமார் ரூ. 3 லட்சம் வைத்திருந்தார். ஆனாலும், மதுரை பாண்டி கோவிலுக்குச் சென்ற இடத்தில், அங்கு ஒரு மண்டபத்தில்எல்லோருக்கும் இலவச அசைவ விருந்து பறிமாறியதை அறிந்து சென்றார். வயிறுமுட்டச் சாப்பிட்டார். உண்ட திருப்தியில், தனது பணப்பையை மறந்து வைத்துவிட்டு பேருந்து ஏறினார். விருதுநகர் செல்லும் வழியில் பணப்பை ஞாபகம் வர, பேருந்திலிருந்து இறங்கி, வேறு பேருந்தில் ஏறி, பாண்டி கோவில் மண்டபம் வந்தார். மண்டபத்தில் யாருமே இல்லை, வைத்த இடத்தில் பணப்பையும் இல்லை. குமுறலோடு மதுரை மாட்டுத்தாவணி போலீசாரிடம் புகாரளித்தார்.
காவல்துறை விசாரணையில், அந்த மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தியவர்கள், திண்டுக்கல் – மட்டப்பாறையைச் சேர்ந்த, கோயம்புத்தூரில் காவலராகப் பணிபுரியும் பாண்டியராஜன் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ‘ஆமாம்.. பணப்பையை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம். காவல்துறையிடம் ஒப்படைக்க நினைத்தபோது, நீங்களே வந்துவிட்டீர்கள். இந்தாங்க அந்தப் பணப்பை’ என்று திருப்பிக்கொடுத்துள்ளார்.
பணப்பை தனக்குத் திரும்பக் கிடைத்ததும் ‘மதுரை பாண்டி ஐயா.. போலீசார் உருவத்தில், தொலைந்த பணத்தை எனக்கு கிடைக்கும்படி செய்துவிட்டாயே! உன் மகிமையே மகிமை!’ என்று மனமுருகி மதுரை பாண்டீஸ்வரரை நன்றியோடு வணங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)