Old man beaten young woman over banana leaf dispute

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகேயுள்ள சுந்தர் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவரது மனைவி சிந்துஜா(30). நிஷாந்த் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் 90 வயது முதியவர் கந்தசாமி என்பவர் நிஷாந்தின் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டி வாழை மரம் வளர்த்து வந்துள்ளார். வாழை மரத்தின் காய்ந்த இலைகள் நிஷாந்த் இடத்துக்குள் விழுந்து வந்துள்ளது. தங்கள் இடத்துக்குள் வரும் வாழை மரத்தின் இலைகளை வெட்டி விடும்படியும், காய்ந்த இலைகளை அகற்றுமாறும் நிஷாந்த், சிந்துஜா இருவரும் கந்தசாமியிடம் கூறியுள்ளனர். ஆனால், அதனை அகற்றாததால் இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தங்கள் இடத்துக்குள் இருந்த வாழை மரத்தின் இலைகளை கடந்த 21ஆம் தேதி நிஷாந்த் சிந்துஜா இருவரும் வெட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதியவர் கந்தசாமி, 22 ஆம் தேதி காலை 7 மணியளவில் நிஷாந்தின் மனைவி 30 வயதான சிந்துஜா வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, சத்தமில்லாமல் அரிவாளுடன் அங்கு வந்து, கோலம் போட்டுக் கொண்டிருந்த சிந்துஜாவின் காலில் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில் நிலை தடுமாறிய சிந்துஜா, பின்னர் சுதாரித்துக் கொண்டு பார்க்கையில் அரிவாளுடன் கந்தசாமி நிற்பதை பார்த்து அலறியபடி உயிர் தப்பி தெருவில் ஓடினார்.

Advertisment

ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் கந்தசாமி அரிவாளுடன் அவரை துரத்திச் சென்று வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய் என கேட்டு சிந்துஜாவின் கையில் அரிவாளால் வெட்டினார். வெட்டுப்பட்ட சிந்துஜாவின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தனர்.‌ இதை தொடர்ந்து முதியவர் கந்தசாமி அரிவாளை காட்டி மிரட்டி விட்டு பின்னர் சாவகாசமாக தனது வீட்டுக்கு நடந்து சென்று விட்டார்.

காயமடைந்த சிந்துஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சிந்துஜா அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி