/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_565.jpg)
தர்மபுரி பேருந்து நிலையம் அருகே சத்திரம் தெருவில் பாலசுப்பிரமணி (வயது 75) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எஸ்.வி. சாலையில் பத்திரப் பதிவு அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருபவரின் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனையடுத்து அழுதுகொண்டே வந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றைத்தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பாலசுப்பரமணி வீட்டிற்குச் சென்று, இதுபோன்று செய்வது சரியா எனக்கோபத்தில் பேசியபோது, திமிராக “நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை; உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்” எனத்தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர், தலைமறைவாகவுள்ள பாலசுப்பிரமணியன் மீது போக்சோவழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இது குறித்து மகளிர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, இது தொடர்பாக அந்த பெரியவரை தேடி வருகிறோம். அவருடைய செல்போன் எண்ணும் அவர்களது வீட்டைக்காட்டுகிறது. அவர்களின் உறவினர் வீடுகளிலும் தேடி வருகிறோம். நிச்சயம் கூடிய விரைவில் பிடித்து விடுவோம்” என்றார்.
சமீபத்தில் தர்மபுரியில் கோவிந்தராஜ் என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது 10 வயது சிறுமிக்கு 75 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)