Old lady who gave the petition to the Vellore collector lay in the structure

Advertisment

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (7ம் தேதி) மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மூதாட்டி ஒருவர் ஆம்புலன்ஸில் வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

வேலூர் மாவட்டம், வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் வித்தியாவதி. இவருக்கு செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ்ச்செல்வி என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகள் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் வசித்து வருகிறார். வித்தியாவதியின் கணவர் இறந்துவிட்டதால் அவர் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸில் வந்து ஸ்ட்ரக்சரில் இருந்தபடியே வித்தியாவதி, ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

Advertisment

அந்த மனுவில், “மூத்த மகள் செந்தமிழ் செல்வி, எனது சொத்துக்களை உயில் எழுதுவதாகக் கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு என்னைத் தூக்கி சென்று கட்டாயப்படுத்தி சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டார். அதன்பின் என்னை கவனிக்காமல் கொடுமைப்படுத்தி வருகிறார். என்னை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் கொலை செய்ய முயற்சிக்கிறார். என்னை ஏமாற்றி வாங்கிக் கொண்ட சொத்துக்களை மீட்டு தர வேண்டும். என்னை கொடுமைப்படுத்திய முதல் மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதனை விசாரித்து ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்து அனுப்பி வைத்தார். மக்கள் குறைதீர்வுக் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸில் வந்து மனு கொடுத்த மூதாட்டியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திடீரென பரபரப்பாகிவிட்டது. ‌