
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த தாயனூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோமரசம்பேட்டையை அடுத்த தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த அக்கமாள் (65), இன்று காலை மாட்டிற்கு புல் அறுப்பதற்காக தோட்டத்திற்கு சென்று புல் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அக்கம்மாளின் கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொன்று விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின், ஒரு காது தோடு, இரண்டு மூக்கில் இருந்த மூக்குத்தி உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், டி.எஸ்.பி வாசுதேவன் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அருகில் கட்டிட வேலையில் ஈடுபட்டுவந்த கொத்தனார், சித்தால்கள் மற்றும் சில தொழிலாளர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காமாளின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.