Old lady kanyakumari case police arrested culprit in five hours

நாகர்கோவில் மாநகராட்சியில் தெருவெங்கும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் மத்தியில் பட்டபகலில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாகர்கோவில் மாநகராட்சியின் 37வது வார்டான கவிமணி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போராசிரியர் செல்லையா பிள்ளை இறந்து விட்டதால் அவருடைய மனைவி பேபி சரோஜா(70) வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (6-ம் தேதி) காலையில் இருந்தே அந்த தெருவில் அரசியல் கட்சியினர் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

இதில் மாலை 4 மணிக்கு ஒரு அரசியல் கட்சியினர் கும்பலாக வந்து பேபி சரோஜாவின் வீட்டில் வந்து அவரிடம் நோட்டீஸ் கொடுத்து ஓட்டு கேட்டு சென்ற ஒரு சில நிமிடங்களில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பேபி சரோஜாவின் வீட்டு முன் நிறுத்தி விட்டு உறவினர் போல் வேகமாக வீட்டுக்குள் நுழைந்து முன்புற கதவை பூட்டி விட்டு அங்கு நின்ற படியே நோட்டீஸை பார்த்து கொண்டிருந்த பேபி சரோஜாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

இதில் ஆவேசமடைந்த பேபி சரோஜா கூச்சலிடவே உடனே அந்த கொள்ளையன் பேபி சரோஜாவை தள்ளி விட்டதில் சுவரில் தலை இடித்து கீழே சோபா செட்டின் பலகை மீது மீண்டும் தலை அடித்து அதன் மீதே விழுந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் வீட்டு முன் வந்து கதவை திறக்க முயன்றனர். இதை சுதாகரித்து கொண்ட கொள்ளையன், உடனே பேபி சரோஜாவின் கழுத்தில் கிடந்த செயின், கையில் போட்டிருந்த இரண்டு காப்பு என 10 பவுன் நகையைப் பறித்து கொண்டு பின் வாசல் வழியாக வெளியே வந்து மரத்தின் மீது ஏறி தப்பி சென்றார். இதனால் அவன் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் வீட்டின் முன்னே தான் நின்றது.

இந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்ற தெரு மக்கள் பேபி சரோஜா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் விசாரணை மேற்கொண்டு கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து கோட்டார் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காமிரா மூலம் பூதபாண்டி சிறமடத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரை கொலை செய்த 5 மணி நேரத்தில் கைது செய்தனர்.

பாஸ்கர் ஏற்கனவே இதே போல் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை மட்டும் தாக்கி நகை பறிப்பதை பழக்கமாக வைத்துள்ளார். மேலும் பேபி சரோஜாவின் வீட்டை இரண்டு நாட்கள் நோட்டமிட்டு இருந்ததை சிசிடிவி காமிரா மூலம் தெரியவந்தது என்றனர் போலீசார்.