/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/old-lady-pv-ins-art.jpg)
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சித்தம்பூண்டி அருகே உள்ள கிராமம் குளத்துப்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சாமியாத்தாள். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி அவர்களுடைய வீட்டில் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் குளத்துப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் மூதாட்டி சாமியாத்தாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (07.06.2025) மாலை சாமியாத்தாள் அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் இரவு, அவரது வீட்டின் முன் பகுதியில் கட்டிலில் சாமியாத்தாள் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து சாமியாத்தாளை எழுப்பி, ‘வீட்டிற்குள் நகை மற்றும் பணம் இருக்கிறதா?’ என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்து வாய் மற்றும் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி இது தொடர்பாக அவரே, உறவினர்களுக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தன்னை திருடர்கள் தாக்கி விட்டதாகவும், கத்தியால் குத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த அவரது உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2025) அதிகாலை மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற எஸ்.பி. ராஜேஷ் கண்ணனும் விசாரணை நடத்தினார். தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)