Old couple passes away in same time

Advertisment

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 73 வயது விவசாயி ராமலிங்கம். இவரின் மனைவி சரோஜா (72). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

சுமார் 53 ஆண்டுகள் ஒற்றுமையுடன் இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர் இவர்கள். அப்படிப்பட்ட இந்தத் தம்பதி இருவரும் இரண்டு நாட்களுக்கு முன், இரவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு படுத்துத் தூங்கியுள்ளனர். அன்றிரவு சரோஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சரோஜா உயிரிழந்துள்ளார். அவரது இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது மகள்கள் ஊரிலிருந்த அவரது தந்தையிடம் சென்று தாய் இறந்ததைக் கூறியுள்ளனர். மனைவி இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமலிங்கத்தின் உயிரும் அவர் படுத்திருந்த படுக்கையிலேயே பிரிந்துள்ளது.

Advertisment

மனைவி இறந்த செய்தியைக் கேட்டு கணவனும் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவன் மனைவி இருவரும் 53 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்தி வாழ்விலும் சாவிலும் இணைபிரியாமல் இணைந்தே சென்ற சம்பவம் சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.