Old Couple passes away near dharmapuri district police investigation

தர்மபுரி அருகே, வீட்டு முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த வயதான கணவன், மனைவியை மர்ம நபர்கள் கழுத்து அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (80),விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா (70). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் உள்ளனர். கிருஷ்ணனும்சுலோச்சனாவும் மட்டும் தோட்டத்துடன் கூடிய வீட்டில் தனியாக வசித்துவந்தனர். வழக்கமாக இரவில் கணவன், மனைவி இருவரும் வீட்டு முற்றத்திலேயே படுத்து தூங்குவார்கள். நேற்று முன்தினம் (12.07.2021) இரவும் அவர்கள் வழக்கம்போல் வாசலில் கட்டில் போட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.

Advertisment

செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) காலையில், அந்த வழியாகச் சென்ற உள்ளூர் மக்கள் சிலர், தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இருவரையுமே மர்ம நபர்கள் கழுத்து அறுத்துக் கொலை செய்திருந்தனர். இருவரும் படுத்துத் தூங்கிய இடத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி வாழை மரங்கள் அருகே சடலமாகக் கிடந்தனர்.

Old Couple passes away near dharmapuri district police investigation

இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி காவல் நிலைய காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள், சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டதில் முக்கிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. விரல் ரேகைப் பிரிவு காவல்துறையினர், சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்துச் சென்றனர். கொல்லப்பட்ட தம்பதியினர் தங்கியிருந்த பகுதி, கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடம் என்பதால் சம்பவத்தின்போது அவர்கள் கத்தி கூச்சல் போட்டிருந்தாலும் யாருக்கும் கேட்டிருக்காது. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத, இருட்டு நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது.

வீட்டில் என்னென்ன பொருட்கள் காணாமல் போனது என்பதும் உடனடியாக தெரியவில்லை. கொலையான தம்பதியினரின் வாரிசுகளுக்குத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது. மர்ம நபர்கள் யாராவது நகை, பணத்தைத் திருடும் நோக்கத்தில் அங்கு வந்தபோது கொலை செய்தார்களா? அல்லது சொத்துத் தகராறில் கொல்லப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் கொல்லப்பட்ட சம்பவம் பில்பருத்தி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.