Advertisment

பழைய கருப்பு - வெள்ளை டி.வி... வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகள்... 

tv

Advertisment

சுமார் 1985-86 ஆம் ஆண்டுகளில் மிகவும் வசதி படைத்தவர்கள் கருப்பு - வெள்ளை டெலிவிஷன் பெட்டிகளைவாங்கி தங்கள் வீடுகளில் வைத்தனர். அதன் மூலம் மத்திய அரசின் தூர்தர்ஷன் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு ஏழு முப்பது மணிக்கு ‘ஒளியும் ஒலியும்’ என்ற பெயரில் திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு திரைப்படம் வெளியிடப்படும்.

இதைப் பார்ப்பதற்காக கிராம மக்கள் டிவி வைத்துள்ள வீடுகளை மொய்ப்பார்கள். சிலர் பொதுமக்களிடம் 50 பைசா ஒரு ரூபாய் கட்டணம் கூட வசூலித்து அந்த நிகழ்ச்சிகளை காண அனுமதித்தனர்.

இப்படி சினிமா திரையில் ஓடிய பாடல்கள், படங்கள் வீடுகளுக்குள் சின்னத்திரையில் ஓட ஆரம்பித்தன. காலமாற்றத்தின் வேக ஓட்டத்தில் கருப்பு - வெள்ளை டிவி மாறி கலர் டிவி பிறகு எல்இடி அடுத்து எல்சிடி என்று விதவிதமான டிவிகள் பிறகு வீடுகளில் மினி தியேட்டர்கள் என்று அதிவேக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கருப்பு-வெள்ளை டிவிகள் குறித்து ஒரு பெரும் வதந்தி பரவி வருகிறது. 1984- 85 காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கருப்பு வெள்ளை டிவிகளில் ஒருவித பாதரசம் உள்ளது. அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரித்த கருப்பு வெள்ளை டிவிகள் பெட்டிகள் யாராவது வைத்திருந்தால் அதற்கு முப்பது லட்சம் விலை கொடுத்து வாங்கி கொள்வதாக கூறி பழைய கருப்பு வெள்ளை டிவி புகைப்படங்களை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி அது வைரலாக பரவி வருகின்றன.

இப்படிப்பட்ட வதந்திகளை நம்பி தேடி சிலர் அலைந்து திரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கருப்பு வெள்ளை டிவி பெட்டிகள் எங்காவது இருந்தால் அதை திருடி செல்வதற்கும் கும்பல்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோபுர கலசத்தின் உள்ளே இரிடியம் உள்ளது. அது பல கோடிக்கணக்கில் விலை போகும் என்று அதை திருட ஆரம்பித்தனர். பிறகு மண்ணுளிப் பாம்புகளுக்குள் இருடியம் உள்ளதாக கூறி காடுமேடெல்லாம் பாம்பு பிடிக்க தேடி அலைந்தனர். தற்போது கருப்பு-வெள்ளை டிவிக்களை தேடி அலைய போகிறார்கள். சீசனுக்கு தகுந்தாற்போல் வதந்திகளும் வலம் வந்தபடியே உள்ளன. ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள். பொது மக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

cudalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe