Advertisment

“எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது” - தமிழக அரசு

publive-image

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகச் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணிகளைத்தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. எண்ணூர் கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெய்யை அகற்றும் பணியில் எண்ணெய்யை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து அகற்றப்படும் எண்ணெய் உட்பட அபாயகரமான கழிவுகளை கும்மிடிப்பூண்டியில் உரிமம் பெற்றுப் பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும்.

இந்த எண்ணெய் அகற்றும் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் சில எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய்க் கழிவுகளையும், சேதமடைந்த பொருள்களையும் அகற்றுவதற்காகத்தேர்ந்த அனுபவங்களையும் தேவையான இயந்திர வசதிகளையும் கொண்டுள்ள சிறப்பான முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பல்லுயிர் இழப்புகளை விரைந்து மதிப்பீடு செய்யும் பணிகளும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை தம்முடைய அலுவலர்களை அந்தப் பகுதியிலேயே நிறுத்திவைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணிகளைத்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment
Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe