Skip to main content

மெரினா வரை பரவிய எண்ணெய் படலம்? - பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Oil slick spread to marina?-public allegation

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

எண்ணெய் அகற்றும் பணியை விரைவுபடுத்துவதற்காக, மேலும் சில எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய்க் கழிவுகளையும், சேதமடைந்த பொருட்களையும் அகற்றுவதற்காகத் தேர்ந்த அனுபவம் கொண்டவர்களையும், தேவையான இயந்திர வசதிகளையும் கொண்டுள்ள சிறப்பான முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியிலேயே முகாமிட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெரினா கடற்கரை வரை தற்பொழுது அந்த எண்ணெய் படிவுகள் படர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மெரினா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் கால்களை வைத்து விளையாடியவர்களின் பாதத்தில் எண்ணெய் துளிகள் ஒட்டிக்கொண்டது. இது தொடர்பாக வீடியோக்கள் எடுத்த சுற்றுலா பயணிகள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். காலில் ஒட்டிய அந்த எண்ணெய் படலம் எவ்வளவுதான் கழுவினாலும் போகவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்