ADVERTISEMENT

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா வீட்டிற்கு சீல்

12:04 PM Oct 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதிக்கு அருகே உள்ள அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சசிகலா புஷ்பாவிற்கு, அதிமுக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட நட்பால் அதிமுகவில் சேர்ந்தார். அதன்பிறகு அதிமுகவில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்தார்.

அதிமுக மகளிரணிச் செயலாளர், தூத்துக்குடி நகர மேயர் பதவி எனக் கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாக இருந்து வந்தது. இதனிடையே அதிமுக தலைமையின் நெருக்கம் ஏற்பட்டதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு மேயராக இருக்கும் போதே ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சசிகலா புஷ்பாவிற்கு அதிமுகவில் எந்த அளவுக்கு செல்வாக்கும் வளர்ச்சியும் இருந்ததோ அதே அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை அறைந்தார் என மாநிலங்களவையில் நின்று கொண்டு சசிகலா புஷ்பா சொல்லிய ஒற்றை வார்த்தை இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. அதன்பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிகலா புஷ்பாவை அதிமுக தலைமை அக்கட்சியில் இருந்து நீக்கியது.

ஜெயலலிதா இறந்த பிறகு பாஜக கட்சியில் சேர்ந்த சசிகலா புஷ்பா தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில் ராஜ்யசபா எம்.பியாக சசிகலா புஷ்பா தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு டெல்லியில் தங்குவதற்காக மத்திய அரசால் நார்த் அவென்யூவில் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும்படி அரசு சார்பில் சசிகலா புஷ்பாவிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது பதவியில் இருக்கும் அதிமுக எம்.பி விஜயகுமார் டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி மது விருந்து நடப்பதாகவும் இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் அளித்து வந்தனர். ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத சசிகலா புஷ்பா அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்ததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT