Skip to main content

முதல்வர் வருகையால் வேகமெடுக்கும் அதிகாரிகள்..! 

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

Officials to speed up CM's visit ..!

 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா பரவல்  தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுக்க தீவிரப்படுத்தி வருகிறார். கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தனியாக சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க. ஸ்டாலின், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் வந்த அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருப்பூரில் 18 வயது முதல் 44 வயதுடையோர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

 

பிறகு கோவை சென்று கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அதைத் தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சிக்கும் சென்று கரோனா சிறப்புச் சிகிச்சை மையங்களைத் திறந்து வைத்தார். இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து  இந்த பரவலைக் கட்டுப்படுத்த சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே  தனியாக ஒரு  ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து தானே நேரில் வரத் திட்டமிட்ட அவர்,  கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய 29ந் தேதி மாலை விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து ஈரோடுக்கு கார் மூலம் வந்து இரவு ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதைத் தொடர்ந்து நாளை 30ந் தேதி காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். 

 

கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கூடுதல் வசதியுடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். பின்னர்  மு.க. ஸ்டாலின், திருப்பூர் சென்று  ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் நாளை இரவே மீண்டும் விமானம் மூலம் சென்னை செல்கிறார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த முதல்வரே நேரில் வருவதால் அதிகாரிகளிடத்தில் தொடர் வேகம் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்