
நாகப்பட்டினத்தில் தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் மாட்டுக்கு தலா ரூ.7,500 வசூல் செய்த பணத்தில், ரூ.3 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தலா 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் அலுவலர்களுக்கு தலா ரூ.7,500 வீதம் பயனாளிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அந்தத் தகவலை தொடர்ந்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மருங்கூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சொக்கலிங்கத்திடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், கால்நடை மருத்துவர் முத்துக்குமரனிடம் இருந்து ரூ.48 ஆயிரம் ரூபாய், மருங்கூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பிரான்சிஸ் மகேந்திரனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மருங்கூர் ஊராட்சி செயலாளர் பிரகாஷ்குமாரிடம் 25 ஆயிரம் ரூபாய் என 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அலுவலர் கஜேந்திரன் முன்னிலையில் நடந்த விசாரணை நள்ளிரவு வரை தொடர்ந்தது.