“Officials need protection from sand robbers” - Anbumani

“தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்க முயலும் அலுவலர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் நிலவுவது அவலமானது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்தகைய சூழலை மாற்ற வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் மானாத்தாள் கிராமத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் வினோத்குமாரை மணல் கடத்தல் கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையர்கள் அச்சமின்றி திரிகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

மானாத்தாள் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி மணல் கடத்தலில் ஈடுபட்ட முத்துராஜ், விஜி ஆகிய இருவரை பிடித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இழுவை ஊர்தி, மணல் அள்ளும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே கிராம நிர்வாக அலுவலரை முத்துராஜ் வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம்.

Advertisment

தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்க முயலும் அலுவலர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் நிலவுவது அவலமானது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்தகைய சூழலை மாற்ற வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.