Skip to main content

பரந்தூர் வந்த ஆய்வுக்குழு அதிகாரிகள்; சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்; போலீசார் குவிப்பு

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Officials of the inspection team who came to Parantur; Public protest by lying on the road; Police build up

 

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான நாளிலிருந்தே சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் எனவும், தங்களை வாழ்விடங்களில் இருந்து அகற்றக் கூடாது எனவும் கோரிக்கை வைத்து சுமார் 400 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 433 வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்றுமே, மக்கள் பகல் வேளைகளில் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு இரவு வேளைகளில் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று மச்சநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி குழு அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதாக வெளியான தகவலையடுத்து பகலிலேயே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்தும், படுத்தும் தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுற்றியுள்ள அனைத்து சோதனை சாவடிகளும் போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 கிராமங்களை தவிர்த்து வெளியாட்கள் யாரும் உள்ளே போகாத முடியாத சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

எதிரொலித்த அதிருப்திகள்; வேங்கை வயல், பரந்தூரில் பதிவான வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Dissatisfaction echoed; Do you know how many votes were cast in Vengai vayal, Parantur?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள்  இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது.