ரர

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு அலுவலகங்கள் பழமையான கட்டிடங்களிலேயே இயங்கி வருகிறது. இந்த கட்டிடங்கள் சரியான பராமரிப்புகள் இல்லாததால் பழுதடைந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் தான் கடந்த ஆட்சி காலத்தில் பழமையான அரசு கட்டிடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கட்டிடங்களின் மராமத்துப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் ஒன்று ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம். ஒரே கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம், தகவல் சேவை மையம், ஆதார் மையம், வட்ட வழங்கல் அலுவலகம் எனப் பல அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த கட்டிடத்தைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Advertisment

பணிகளை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் பழைய சிமெண்ட் தண்ணீர் குழாய்களை அகற்றிவிட்டு பிளாஸ்டிக் குழாய்களைப் பொருத்திக் காவி வண்ணம் பூசி மறைத்துவிட்டனர். தொடர்ந்து அலுவலக வாசலில் பல நூறு பேருக்கும் பல வாகனங்களுக்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருந்த சுமார் 75, 80 ஆண்டுகள் பழமையான வேப்பமர கிளைகளை மொட்டையாக வெட்டிவிட்டனர். கட்டிடத்திலிருந்து 10 அடி தூரத்தில் பாதிப்பில்லாமல் நின்ற பழமையான மரத்தை இப்படி வெட்டிவிட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள் மரங்களின் காதலர்கள்.

இது குறித்து மரம் வளர்ப்போர் சங்கம் மரம் தங்க.கண்ணன் நம்மிடம்... " ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் நின்ற பழமையான வேப்ப மரம் வெட்டப்படுவது அறிந்து வட்டாட்சியரிடம் கேட்டால் நான் வெட்டச் சொல்லவில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேளுங்கள் என்கிறார். பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டால் எங்களுக்குத் தெரியாது யார் மரம் வெட்டியது? புகார் கொடுங்கள் என்கிறார். கட்டிடத்தைப் பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரியும் வெட்டச் சொல்லவில்லை. கட்டிடத்தில் அலுவலகம் நடத்தும் வட்டாட்சியரும் வெட்டச் சொல்லவில்லை என்றால் யார் வெட்டச் சொன்னது? யார் வெட்டினார்கள் என்று தெரியவில்லை.

Advertisment

கட்டிடத்தை மராமத்து செய்யும் ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர் தான் அதிகாரிகளிடம் கேட்காமல் வெட்டியிருக்கிறார் என்கிறார்கள் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள். மரத்தின் இலைகள் கட்டிடத்தில் கொட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் கட்டிடம் சேதமடைகிறது என்றும், மரம் இருந்தால் பறவைகைள் வந்து அமர்ந்து கட்டிடத்தில் விதைகள் விழுந்து முளைப்பதால் கட்டிடம் சேதமாகும் என்றும் ஒப்பந்த நிறுவன பொறியாளர் தான் மரம் வெட்டச் சொன்னதாகக் கூறுகின்றனர்.

பருவ காலநிலை மாற்றத்தால் வெப்பமடைதல் அதிகரிக்கிறது. அதனைச் சமாளிக்க அதிகமான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் போகுமிடமெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வருவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அவரது ஆலங்குடி தொகுதியிலேயே அவரது அலுவலகம் எதிரே உள்ள வட்டாட்சியர் அலுவலக வாசலில் நின்ற பழமையான மரத்தை வெட்டியிருப்பது வேதனை அளிக்கிறது. மரத்தை வெட்டியவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.