officers do not create headmasters posting in primary schools 

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாகத்தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்குத்தலைமை ஆசிரியர்களையே நியமிக்கப்படாமல் அலட்சியமாக உள்ளதால் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

திருமயம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி கலாசாலை தொடக்கப்பள்ளியை அரசு ஏற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் கோலாகலமாக விழா நடத்தி திறந்து வைத்துள்ளார். ஆனால் இந்தப் பள்ளிக்கு 10 ஆண்டுகளாகவே தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படாமல் 2 இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டே செயல்படுகிறது. 2022-2023 கல்வி ஆண்டில் 32 மாணவர்கள் பயின்று வந்தார்கள்.

அதேபோல கறம்பக்குடி ஒன்றியம் முருங்கைக்கொல்லை கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆகும்.இதே போல குன்றாண்டார் கோயில் ஒன்றியம் ஒடுக்கூர் ஊராட்சி கொட்டப்பள்ளம் கிராமத்திலும் 2018 ஆம் ஆண்டு புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதே கல்வி ஆண்டில் அன்னவாசல் ஒன்றியம் உய்யக்குடிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு இடைநிலை ஆசிரியருடன் பள்ளி செயல்படுகிறது. இங்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 24 ஆகும். இப்படி பல பள்ளிகள் உள்ளன.

Advertisment

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களின் சிரமங்களை தவிர்த்து அனைவரையும் கல்வி கற்க வைக்கும் நல்ல எண்ணத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் எண்ணிக்கையில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. அந்த புதிய பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் உருவாக்கி அரசுக்கு தெரியப்படுத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசாணை இருந்தும் கூட அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது.

அரசின் 7.5% இட ஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யாவிட்டால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படும்" என்றனர். தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாம்.