/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_103.jpg)
ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலத்தின் மனைவி மற்றும் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம். இவர் 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தார்.பதவியில் இருந்த காலத்தில் தனது மனைவி வசந்தி மற்றும் மகன் விக்ரம் பெயரில் சொத்துக்களைச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வெங்கடாச்சலம் ஓய்வு பெறும் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2021 செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 11 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 15 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்து கொண்டிருந்த போதே வேளச்சேரியில் உள்ள வீட்டில் வெங்கடாச்சலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அந்நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து ஆதாரங்களைத்தேடும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். சோதனைகளின் முடிவில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வெங்கடாச்சலத்தின் மனைவிவசந்தி மற்றும் அவரது மகன் விக்ரம் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் துறையில் முறைகேடுகள் செய்து சொத்துக்களைச் சேர்த்தது தெரிய வந்தது.
2013 ஆம் ஆண்டில் 57 லட்சத்திற்கு சொத்துகளை வைத்திருந்ததாகவும் 2021 ஆம் ஆண்டில் வருமானத்தை விட 227% சொத்து சேர்த்திருப்பது ஆய்வின் போது தெரிய வந்துள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தபோது பல நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)