/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temple-occupy_0.jpg)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது வைத்தியநாதசுவாமி அசலாம்பிகை ஆலயம். இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானவர் பிறகு வசிஷ்ட முனிவரால் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டது. இந்த ஊரும் வசிஷ்ட முனிவரின் பெயரால் வதிர்ஷ்டர் குடியிருந்த காரணத்தினால் வசிஷ்டர்குடி என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மக்கள் பேச்சு வழக்கில் மருவி வதிட்டகுடி, என்றும் பிறகு தற்போது திட்டக்குடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு எதிரே மிகப்பெரிய தீர்த்தக்குளம் ஒரு காலத்தில் இருந்தது. காலப்போக்கில் அந்த குளத்தை சுற்றிலும் வீடுகளும், கடைகளும், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு குளம் இருந்த அடையாளம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டது. குளத்தை சுற்றிலும் குடியிருந்த வீடு, கடைகளில் வசித்தவர்கள் அவரவர் வீட்டு சாக்கடை தண்ணீரை அந்த குளத்தில் விட்டு புனிதமான அந்தக் குளம் கழிவுநீர் குளமாக மாற்றி விட்டனர்.
அந்த குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை சீர் படுத்த வேண்டுமென்று சிவனடியார்கள் கோயில் பக்தர்கள் சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களால் நீதிமன்றத்தில் வழக்கும் நடத்தப்பட்டது இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தைச் சீர்ற்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அறநிலையத் துறை பலமுறை அந்த குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி சீர் செய்வதற்காக முயற்சி எடுத்தும் தடைபட்டுக் கொண்டே வந்தது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்களை இதற்கு மறைமுக தடையை ஏற்படுத்தியதாக சிவனடியார்களும் பக்தர்களும் அவ்வப்போது குற்றம்சாட்டி வந்தனர். இதனால் வேதனையடைந்த சிவனடியார்கள், பக்தர்கள் பலமுறை குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டங்களை நடத்தினார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அந்த இயக்கத்தினர் மற்றும் சிவனடியார்கள் போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்திற்கு போலீசார் தடைவிதித்து மீறி போராடியவர்களை கைது செய்தது காவல்துறை. இதன்பிறகு திட்டக்குடி வட்டாட்சியராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் என்பவர் பொறுப்பேற்றார். அதன் பிறகு அறநிலையத் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை பாதி அளவிற்கு அகற்றினார்கள். முழுமையாக அகற்றுவதற்குள் மீண்டும் உயர் அதிகாரிகளால் அதற்கு தடை ஏற்பட்டது. வட்டாட்சியர் மாற்றப்பட்டார். அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் கிடந்தது. தற்போது அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேகர்பாபு ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி பல்வேறு கோயில் நிலங்கள் கோயில் வளாகங்களில் கட்டப்பட்டுள்ள கடைகள் போன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே பாதி அகற்றப்பட்டு மீதியுள்ள இந்தக் திட்டக்குடி சிவன் கோயில் குள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு வருவாய்த் துறையும், அறநிலையத்துறை முடிவு செய்தனர். அதன்படி 6.7.2021 அன்று பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தயாராகி குளத்திற்கு சென்றனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு பத்து பேர் சாலையில் அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என்று கூறி முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித் குமார், திட்டக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடப்பதாக கூறியவர்கள் எங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளும் தேதி குறிப்பிடாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை கைவிட்டுச் சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலைந்து சென்றனர். இதுகுறித்து திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சிவனடியார்கள், சிவபக்தர்கள் கோயில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு உள்ளதால் இந்த கோயில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றி குளத்தை சீர் செய்வது தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. எனவே திட்டக்குடி சிவன் கோயில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயம் கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)