/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/peo222.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு உள்ள சாலையில், கடந்த சில ஆண்டுகளாக சாலையின் இருபுறங்களிலும் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கடைக்கு வருபவர்கள், அவர்களது இருசக்கர வாகனங்களை இருபுறங்களிலும் கடையின் முன்பு நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு விபத்துகளும் நிகழ்ந்தது.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 100- க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் இரவு, பகல் பாராமல் வந்து செல்கிறது. அவசர ஊர்திகள் வந்து செல்வதற்கு இடையூறாக இந்த ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனுக்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிதம்பரம் சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினரை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்பேரில், நேற்று (17/09/2021) நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரந்தாமன், மற்றும் உதவிபொறியாளர் கண்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் பொறியாளர் விஜயரங்கன் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு விசாலமான சாலை காணப்படுவதைக் கண்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உரிய நடவடிக்கை மேற்கொண்ட சார் ஆட்சியருக்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)