/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_265.jpg)
ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் செயல்பட்டதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், இளங்கலை படிப்பில் (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 15% இடங்களும், முதுகலை படிப்பிற்கு (எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்பு) 50% இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இவ்வாறு,மத்திய அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்இடங்களில், தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி,தமிழக அரசு, அ.தி.மு.க., பா.ம.க., திராவிடர் கழகம், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளைவிசாரித்து,கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய-மாநில அரசுகளும், மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் முடிவெடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குனர், மத்திய சுகாதாரத்துறை, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் குழுவை அமைத்து இறுதி செய்ய வேண்டும்.இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து, மத்திய அரசு மூன்று மாதங்களில் (27.10.2020) அறிவிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,‘கடந்த செப்டம்பர் மாதம், மத்திய சுகாதாரத்துறை செயலர் அமைத்த குழுவில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோரை சேர்க்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்காததால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனக் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)