
நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் அளித்திருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த கிருஷ்ணன் ராமசாமி, "நீதித்துறையைக் களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல். ஜூலை 11- ஆம் தேதி அன்று உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் வகையில் செயல்பாடு உள்ளது. தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்; திருத்தம் இருந்தால் முறையிட்டு இருக்கலாம்" என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தன்னைப்பற்றி தனிப்பட்ட கருத்துகளை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியதாக விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நாளை (05/08/2022) பிற்பகல் 02.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.