Skip to main content

சத்துணவு மாணவர்களுக்கு உணவுக்குப் பதிலாக பொருட்கள் வழங்கப்படுகின்றன! – தமிழக அரசு விளக்கம்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

Nutrition students are given ingredients instead of food! - Government of Tamil Nadu Description

 

கரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் செயல்படாத போதும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் உள்ள மாணவ மாணவியருக்கு, உணவுக்குப் பதிலாக அதற்குரிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க,  ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில்,  ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  தமிழகம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு மையங்கள் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 குழந்தைகள், ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 மாணவ மாணவியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கக்கூடிய 5 லட்சத்து 90 ஆயிரத்து 913 மாணவ மாணவியர், இதுதவிர,  தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் மூலம் 4 ஆயிரத்து 746 பேர் என, 48 லட்சத்து 56 ஆயிரத்து 783 பேர் பயனடைந்து வருகின்றனர்.

கரோனா பேரிடர் சமயத்தில்,  தினமும் மாணவர்களையோ, பெற்றோர்களையோ வரவழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பானது அல்ல என்பதால், ரேஷன் கடைகள் மூலம் வழக்கமான அளவை விட கூடுதல் பருப்பு வழங்கப்படுகிறது.

சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள்,  கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரிசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை, அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர். இதன் மூலம்,  இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளனர்.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல்,  எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு, மே மாதத்திற்கான சத்துணவுப் பொருட்களாக (16,138.69 மெட்ரிக் டன்) 1 கோடியே 61 லட்சத்து 38 ஆயிரத்து 690 கிலோ அரிசி, மற்றும் (5207.84 மெட்ரிக் டன்) 52 லட்சத்து 7 ஆயிரத்து 840 கிலோ பருப்பு உள்ளிட்டவற்றை,  சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம்,  முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க,  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல்,  வழக்கு விசாரணையின் போது, அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.