Nutrition students are given ingredients instead of food! - Government of Tamil Nadu Description

கரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் செயல்படாத போதும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் உள்ள மாணவ மாணவியருக்கு, உணவுக்குப் பதிலாக அதற்குரிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க, ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும்,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி சார்பில் பதில்மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு மையங்கள் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 குழந்தைகள், ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 மாணவ மாணவியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கக்கூடிய 5 லட்சத்து 90 ஆயிரத்து 913 மாணவ மாணவியர், இதுதவிர, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் மூலம் 4 ஆயிரத்து 746 பேர் என, 48 லட்சத்து 56 ஆயிரத்து 783 பேர் பயனடைந்து வருகின்றனர்.

Advertisment

கரோனா பேரிடர் சமயத்தில், தினமும் மாணவர்களையோ, பெற்றோர்களையோ வரவழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பானது அல்ல என்பதால், ரேஷன் கடைகள் மூலம் வழக்கமான அளவை விட கூடுதல் பருப்பு வழங்கப்படுகிறது.

சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரிசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை, அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர். இதன் மூலம், இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளனர்.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு, மே மாதத்திற்கான சத்துணவுப் பொருட்களாக (16,138.69 மெட்ரிக் டன்) 1 கோடியே 61 லட்சத்து 38 ஆயிரத்து 690 கிலோ அரிசி, மற்றும் (5207.84 மெட்ரிக் டன்) 52 லட்சத்து 7 ஆயிரத்து 840 கிலோ பருப்பு உள்ளிட்டவற்றை, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், வழக்கு விசாரணையின் போது, அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.