nurses in all districts in tamilnadu government

Advertisment

தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மத்திய அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் போராட்டம் நடைபெற்றது.

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத் தொகையும், கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், கரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடுமற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

ஆறு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்துசெய்ய வேண்டும். மத்திய அரசு செவிலியர்களைப் போல ஐந்து கட்ட காலமுறை பதவி உயர்வு மற்றும் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட பதவி பெயர்மாற்ற அரசு ஆணை வழங்க வேண்டும். புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் இன்று (29/01/2021) முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது என்ற முடிவுக்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 1500- க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று (29/01/2021) கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சகிலா கூறுகையில், "செவிலியர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள். நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பணிபுரிவார்கள். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 200- க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். அதே போல் கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 1,500- க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். இதே போல் எம்.ஆர்.பி.யில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளோம்" என்றார்.