/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/omalur_0.jpg)
சாலை விபத்தில் அடிபட்டு உடல் முழவதும் ரத்தக்கறையுடனும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் முதலுதவி சிகிச்சையினால் முகத்தை சுற்றிலும் துணி சுற்றப்பட்டிருந்ததால் அது கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியருக்கு அது கணவர் தான் என்று அடையாளம் காட்டியது கையில் அணிந்திருந்த திமுக சின்னம் பொறித்த மோதிரம்.
சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது51). இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சீனிவாசன் - சிவகாமி தம்பதிக்கு ஹேமவாணி(14) என்ற மகள் உள்ளார்.
வழக்கம் போல நேற்று காலை சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து விட்டார். தனது அக்காள் பூங்கோதையை பைக்கில் அழைத்துச்சென்று புளியம்பட்டியில் விட்டுவிட்டு மீண்டும் மேச்சேரிக்கு தனது மோட்டார் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார் சீனிவாசன். அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் போன் பேசுவதற்காக சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.
சீனிவாசன் சாலையின் ஓரத்தில் நின்று போன் பேசிக்கொண்டிருந்போது, மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் சீனிவாசன் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் விழுந்து கிடந்தவரை பார்த்து பதறிய அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சீனிவாசனை மருத்துவர்கள் பரிசோதித்தனர். செவிலியர் சிவகாமியும் மருத்துவர்கள் சொன்னபடி சிகிச்சையளித்தார். சீனிவாசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அடிபட்டதில் சீனிவாசனின் முகம் முழுவதும் ரத்தம் இருந்ததால், தலையை சுற்றி துணி கட்டப்பட்டிருந்ததால் அடிப்பட்டவர் யார் என அடையாளம் தெரியவில்லை. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சீனிவாசன் உடலில் இருந்த ரத்தக்கறையை அகற்றிக்கொண்டிருந்தார் சிவகாமி. அப்போது சீனிவாசன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சீனிவாசன் திமுக பிரமுகர் என்பதால் அவர் கையில் இருந்த திமுக சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரத்தை பார்த்ததும் இது தன் கணவர் மோதிரம் மாதிரி தெரிகிறதே என்று பரபரத்தார். அவசர அவசரமாக தலையை சுற்றியிருந்த துணியை கழற்றியபோது , அது தன் கணவன் சீனிவாசன் என்று சிவகாமிக்கு தெரியவந்தது. கணவனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார் சிவகாமி. சிவகாமியின் பரிதாப நிலையைக்கண்டு சுற்றி நின்றிருந்த மருத்துவர்களும், செவிலியரும் செய்வதறியாமல் தவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)