Skip to main content

சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி; அரசு மருத்துவமனையில் அலட்சியம்

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

nurse administered a dog bite injection girl who came government hospital for cold treatment

 

கடலூர் அருகேயுள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான இவரது மகள் சாதனா(13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு சளி தொந்தரவு இருந்ததால் நேற்று முன்தினம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தந்தை கருணாகரன் அழைத்து வந்தார். அங்கிருந்த டாக்டர், சாதனாவை பரிசோதனை செய்து, ஊசி மற்றும் மாத்திரை எழுதிக் கொடுத்துள்ளார். மருத்துவமனை பார்மசியில் மாத்திரை வாங்கிக்கொண்டு, ஊசி போடச் சென்றார். அங்கிருந்த செவிலியர்கள், சாதனா கொடுத்த டாக்டர் சீட்டை வாங்கிப் பார்க்காமல் இரண்டு ஊசிகளைப் போட்டுள்ளனர். 

 

அப்போது, 'சீட்டை பார்க்காமல் என்ன ஊசி போடுகிறீர்கள்?' என கருணாகரன் கேட்டார். அதற்கு செவிலியர்களோ, 'நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள்' எனக் கூறியுள்ளனர். கருணாகரன் 'சளி பிரச்சனைக்கு ஊசி போட வந்தோம். நீங்கள் ஏன் நாய்க்கடி ஊசி போட்டீர்கள்? எனக் கேட்டதற்கு செவிலியர்கள் மழுப்பலாகப் பேசியுள்ளனர். மேலும், 'தெரியாமல் தவறு நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள்' எனக் கூறியுள்ளனர். 

 

அப்போது, திடீரென மயங்கி விழுந்த மாணவி சாதனாவை உள் நோயாளிகள் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்து சிகிச்சை அளித்த செவிலியர்கள், பணியில் இருந்த டாக்டர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாகரன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வந்தது. 

 

விசாரணையில் செவிலியர் கண்ணகி கவனக் குறைவாகப் பணி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்  பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக நேற்று அரசு மருத்துவமனை இணை இயக்குநர் சாரா ஷெரின் பால் தெரிவித்துள்ளார். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன் பிரசவ அறுவை சிகிச்சையின் போது கர்ப்பப்பையுடன் சேர்த்து உடல் தைக்கப்பட்ட சர்ச்சை பூதாகரமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சையாக சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்