
தமிழகம் முழுவதும், ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவுள்ள 20,204 கோவில்கள், பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களில் உள்ள 21,131 கோவில்கள் கரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி, தினமலர் திருச்சி-வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் மற்றும் வழக்கறிஞர் கவுசிக் ஆகியோர் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து அறநிலையத்துறை சார்பில், ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடேஷ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிராமப்புறங்களில் உள்ள பெரிய கோவில்களைத் தவிர, ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவுள்ள 20,204 கோவில்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள 21,131 கோவில்கள் கரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
மூடப்பட்டுள்ள கோவில்களில் உள்ள ஊழியர்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண உதவிகளைத் தவிர்த்து, கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு, அதைப் பரிசீலித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை. வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)