Skip to main content

தமிழகத்தில் அணுக்கழிவு மையம்... தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா? – சீமான் கடும்கண்டனம்

Published on 14/06/2019 | Edited on 14/06/2019


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் கழிவுகளைச் சேமித்து வைக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கிற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அளிக்கக்கூடிய நாசகர திட்டமாகும்.

 

seeman



தமிழக மக்களுக்கும், இந்த மண்ணிற்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கிற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில்.. மானுட வாழ்க்கைக்கும், இந்த நிலத்திற்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடிய அணுக்கழிவுகளைச் சேமித்து வைக்க அணுக்கழிவு மையத்தை கூடங்குளம்அணு உலை அருகிலேயே அமைக்க முற்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டம் வன்மையானக் கண்டனத்திற்குரியது.



1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.

 

seeman



கூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு 15 நிபந்தனைகளை விதித்தே உச்ச நீதிமன்றம் இயங்க அனுமதித்தது. அவற்றுள் முதன்மையானது, தற்காலிக அணுக்கழிவு மையத்தை (AFR) ஐந்தாண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்பதாகும். அக்காலக்கெடு 2018, மார்ச் மாதத்தோடு முடிவடைந்த நிலையிலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் கேட்டிருக்கிறது இந்திய அணுசக்தித்துறை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மென் நீர் உலை என்பதால் ஏகப்பட்ட சிக்கல்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வருவதாகக் கூறி, தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கே திக்கித் திணறி வருவதை இந்திய அணுசக்தித் துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது. மேலும் கூடங்குளம் அணு உலை தொடர்பாக நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள் அணு உலை அமைக்க பட்ட விதத்திலேயே இருக்கின்ற சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இத்தகைய அசாதாரண நிலையில் உருவாக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த நிலையிலும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது. இந்த மண்ணில் வாழக்கூடிய மண்ணின் மக்களை சோதனைக்கூட எலிகளாக கருதி இது போன்ற பேரழிவு திட்டங்கள் இந்த மண்ணில் நடைமுறைப்படுத்தப்படுவது இம்மண்ணில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழனின் உயிர் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் பெருந்தீங்கினை ஏற்படுத்துவது ஆகும்.

 

 



ஒருவேளை தற்காலிக அணுக்கழிவு அமையம் அமைக்கப்பட்டுவிட்டாலும்கூட அத்தோடு சிக்கல் முழுவதுமாகத் தீரப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் அணுக்கழிவுகளை தற்காலிக மையத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு, அவற்றை அதிக ஆழத்தில் அமைக்கப்படக்கூடிய நிரந்தர அணுக்கழிவு மையத்திற்குப் (Deep geological repository - DGR) பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையத்தை எங்கு அமைப்பது என்பதையே இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்யவில்லை. இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ‌. நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம், கோலாரில் பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் அமைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தபோது, அதற்கு அம்மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி முற்றாகக் கைவிடப்பட்டது. இதுவரை எந்த இடத்தில் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பது என்கின்ற எந்த முடிவினையும் இந்திய அணுசக்தி துறை எடுக்கவில்லை.



நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறாத நிலையில் கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கஇந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்.

 

seeman



அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் க்ளெமென்ட் நகரத்தின் கடற்கரையில் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. மூன்று அணு உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டுவிட்டப் பிறகும், அங்கிருக்கிற அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் அறிவியல் வளர்ச்சி நாடான அமெரிக்க வல்லாதிக்கமே திகைத்து நிற்கிறது.


உலகளாவிய அளவில் அணுக்கழிவுகளை கையாள்வதற்கான அறிவியல் இன்னும் வளராத சூழலில் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க முடிவு செய்திருப்பது என்பது தமிழகத்திற்கு பேராபத்தை உண்டாக்குகின்ற ஏதோச்சதிகார நடவடிக்கை.



அணுக்கழிவு கதிர்வீச்சு வெளிப்பட்டதால் தற்காலத்தில் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் நடந்த பேரழிவைக் கண்கூடாகக் கண்டும்கூட அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளாத இந்திய அரசு தமிழகத்தை சோதனைக் கூடமாக மாற்ற விரும்புவது எதனாலும் அனுமதிக்க முடியாது.



ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு அமையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத்திட்டங்களையெல்லாம் தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப்படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.



எனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை (14-06-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் எனது தலைமையில் திருநெல்வேலி, இராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



அதுசமயம், இனமானத்தமிழர்களும், உயிரினும் மேலான உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று இப்பேரழிவுத்திட்டத்தை விரட்டியடித்து நம் தாய் மண்ணை காத்திட அணியமாக வேண்டும் என உரிமையோடு அழைக்கிறேன்.



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்