Skip to main content

திமுக பிரமுகர் கன்னத்தில் அறைந்த நாம் தமிழர் கட்சிக்காரர்! 

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

NTK member slapped DMK member
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகர்

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பேரில் பணித்தள பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஞானம் என்பவரைப் பணி மாற்றம் செய்யக் கோரி அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகர் என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.

 

அதன்படி ஊராட்சி நிர்வாகம் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் ஞானம் சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் அவதூறான வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுதாகருக்கும், திமுக பிரமுகர் ஞானத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்ச் சண்டை போட்டவர்கள் பின்னர் இருவரும் அடித்துக் கொண்டனர். அங்கு இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.  

 

திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அடித்துக் கொண்டபோது, பிரச்சனை செய்யாம இங்கிருந்தது போங்கப்பா என ஊராட்சி மன்றத் தலைவர் எழிலரசியின் கணவரும் ஆக்டிங் தலைவருமான வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

 

NTK member slapped DMK member
திமுக பிரமுகர் ஞானம்

 

இருவருக்கும் ஆதரவாக அவரவர் கட்சியினர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு குவிந்திருந்தனர். நாம் தமிழர் கட்சியினர் பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகரை பார்த்து, நீ கஞ்சா விற்பவன். உனக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் திமுக பிரமுகர் ஞானம் கேட்டதும், இதில் ஆத்திரமடைந்த சுதாகர் சட்டென்று ஞானத்தின் கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார். அடி வாங்கிய ஞானம் அதிர்ச்சியுடன் அங்கேயே கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டார்.

 

இதனால் அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் படுகாயமடைந்ததாக சுதாகர் மற்றும் ஞானம் இருவரும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்