Advertisment

“தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்படும் இனவாதத் தாக்குதலேயாகும்” - மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம் 

NTK Leader Seeman condemn to RRB Exam

இரயில்வேத் துறைத் தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும்.

Advertisment

இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் மே 9 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் விண்ணப்பித்த தேர்வருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், ஈரோட்டில் விண்ணப்பித்த தேர்வருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர், மற்றும் பலருக்கு வட மாநிலங்களிலும் எனப் பணியாளர் தேர்வு வாரியம் வேண்டுமென்றே 1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது. தேர்வு மையம் அமைந்துள்ள குறிப்பிட்ட இடம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. மேலும், தற்போது கொரோனா மூன்றாவது அலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்குப் பயணிப்பதும், அனுமதி பெறுவதும், தொற்றில்லா சான்றிதழ் பெற்றுத் தேர்வு எழுதுவதும் மிகக் கடினமானது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென, தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்படும் இனவாதத் தாக்குதலேயாகும்.

இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்? என்பது குறித்தும், முறைகேடாகத் தேர்வு நடைபெறும் வட மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்போது, அப்படியான எந்தப் புகாரும் எழாத நிலையில் தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்கத் தேர்வு வாரியம் தவறியது ஏன்? என்பது குறித்தும் இந்திய ஒன்றிய அரசும், தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியமும் விளக்கமளிக்கவேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தொடர்வண்டித்துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோது, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது வாய்மூடி அமைதி காப்பது ஏன்? என்பது குறித்தும், தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பில் என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.

ஆகவே, தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் வழிவகைச் செய்ய இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதுவரை தொடர்வண்டித்துறைத் தேர்வினைத் தள்ளிவைக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ntk seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe