“சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” - என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

py-legilature

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான என். ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குநரை நியமிப்பதில் ஆளுநர் கைலாசநாதனுக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்த அதிகாரியை ஆளுநர் கைலாசநாதன் நியமிக்காமல், தன்னிச்சையாகவே செவ்வேள் என்பவரை சுகாதாரத்துறை இயக்குநராக நியமித்துள்ளார். இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. 

இதனால் கடும் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ரங்கசாமி, “தனக்குத் தெரியாமல் இது போன்று அரசாணை வருவதற்கு என்ன காரணம்?. நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் போது எனக்குத் தெரியாமல் ஆளுநர் நேரடியாக நியமித்து அரசாணை வெளியிடுகிறார் என்றால் நான் எதற்கு இந்த பதவியில் இருக்க வேண்டும்?” என்று கோபமாகப் பேசிவிட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் விழா ஒன்றையும் முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தார். இது குறித்து  தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு சென்ரு சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 45 நிமிடங்களாக நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் முதலமைச்சர் ரங்கசாமி சமாதானம் அடையவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற உள்துறை அமைச்சர் இது தொடர்பாக ஆளுநர் கைலாஷ்நாதனிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக நேற்று (08.07.2025) முதல் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒன்றை இன்று (09.07.2025) நடத்தினர். அதன் பின்னர் சபாநாயகர் செல்வத்தைச் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதாவது அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேல் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இந்த கடிதத்தைச் சபாநாயகரிடம் வழங்கினர். 

அந்த கடிதத்தில், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும். அதற்காகச் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் முதலமைச்சருக்கு முழு அதிகாரம் கிடைக்கும். அதனால் மாநில அந்தஸ்தைப் பெற வலியுறுத்துவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சபாநாயகர் செல்வம் தெரிவிக்கையில், “இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அனைத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில பெறுவோம்” எனத் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக முதலமைச்சர் ரங்கசாமி, “பல்வேறு விஷயங்களில் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அதேபோல தலைமைச் செயலரும் கூட அரசாங்கத்திடம் ஒத்துப்போகவில்லை. சில அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துப்போகவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கச் செய்வது தான். மாநில அரசுக்கான அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தித்தான் நான் என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியைக் கொண்டு வந்தேன். அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடத்துகிறோம். ஆனால் மாநில அந்தஸ்து பெறாத நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் கை ஓங்கி இருக்கிறது” என ஏற்கனவே அவரது நண்பர்களிடமும், சில அமைச்சர்களிடமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

cm rangasamy governor nr congress NR Congress MLA Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe