
பிரபல ரவுடி நடுரோட்டில் சரமாரி வெட்டிக்கொலைசெய்யப்பட்டதோடு இறந்த பின்னும் அவரின் முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது.
வேலூர் அடுத்த அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான எம்.எல்.ஏ. ராஜா (எ) ராஜ்குமார் (42). இவர் மீது பல்வேறு கொலை, வழிப்பறி, கடத்தல் போன்ற வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (02.07.2024) இரவு ரவுடி ராஜா அரியூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது எதிரே காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர்.
இதில் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த ரவுடி ராஜாவை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கும்பல் ராஜாவின் முகத்தை சரமாரியாக வெட்டியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்தது. பின்னர் கொலை கும்பல் ஒரு வீச்சு அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியூர் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட ரவுடி ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்ற கும்பலை உடனே பிடிக்கும்படி போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதோடு கொலை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்யும் பணியையும் தொடங்கினர்.
இதற்கிடையே காரில் தப்பிச்சென்ற கொலை கும்பலை வேலூர் வல்லம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதத்தை தடுக்க காவல்துறை குவிக்கப்பட்டதால் அரியூர் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அரியூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜா என்கின்ற எம்.எல்.ஏ ராஜா மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளன. வழக்கம்போல டீக்கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென காரை ராஜா மீது மோதி ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
முதல்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித் குமார், ராஜேஷ், தேஜேஷ் என்பதும், இவர்களுக்கும் ரவுடி எம்எல்ஏ ராஜாவுக்கும் இடையே ஏற்கனவே நடந்த கொலைகள் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதில் பழிதீர்த்து கொள்ளவும், ஏரியாவில் யார் பெரியவர் என்பதிலும் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த வாக்குவாதத்தில், ‘உங்களை நான் கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று ரவுடி ராஜா கூறியதாக தெரிகிறது. இதனால் நம்மை கொலை செய்வதற்கு முன்பு நாம் அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். பிடிபட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே எதாவது வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறினர்.