Skip to main content

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு; தேர்வுகள் ஒத்திவைப்பு! 

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Notification of holidays to educational institutions; Postponement of exams

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மீட்புப் பணியில் ஈடுபடச் சென்னை மாநகராட்சியில் இருந்து 4 குழுக்களாக 16 பொறியாளர்கள் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

அதே சமயம், விடாது பெய்யும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் (19.12.2023) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டு இருந்தார். மேலும், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (19.12.2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். அதோடு தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை (19.12.2023) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மாற்றி நாளை (19.12.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (19.12.2023) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதேபோன்று கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (19.12.2023) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவித்துள்ளார். அதே சமயம் முன்னதாக அதிகனமழை காரணமாகத் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கும் நாளை (19.12.2023) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.