Notice to tvk Bussy Anand with 'What is the length and breadth of the stage?'-21 questions

Advertisment

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து செப்.23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் எஸ்.பி அலுவலகத்தில் மனுகொடுக்க சென்ற பொழுது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லை. அதனால் அவருக்கு அடுத்தகட்டமாக உள்ள அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

tvk

Advertisment

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விடுமுறை முடிந்து இன்று விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகு மாநாட்டிற்கு அனுமதி கிடைப்பது தொடர்பான தகவல் தெரிய வரும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 21 கேள்விகளை முன் வைத்து விழுப்புரம் காவல்துறை டிஎஸ்பி பார்த்திபன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பாதுகாப்பு அரண்; பார்க்கிங் வசதி; மாநாட்டு மேடையின் நீளம், அகலம்; இருக்கைகளின் எண்ணிக்கை; எந்த பகுதியில் இருந்து எவ்வளவு பேர் மாநாட்டிற்கு வருவார்கள்; சிறப்பு விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்வார்கள்; குடிநீர் வசதி; ஆம்புலன்ஸ் வசதிக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனஉள்ளிட்ட21 கேள்விகளை முன் வைத்து கடிதத்துடன் கூடிய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கொடுக்கப்படும் பதில்கள் அடிப்படையிலேயே மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.