/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_178.jpg)
கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
திருச்சியில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன், “108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர்ஆர்.ராஜேந்திரன் திருச்சியில் அளித்த பேட்டியில்,தமிழக முழுவதும் 1353, 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளது.சமீப காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. எனவே இதனை மறைக்கும் நோக்கில் மேல் சிகிச்சை என்ற பெயரில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆபத்து நேரத்தில் உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டம், ஒரு மருத்துவமனையில் இருந்து அடுத்த மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்து,பிரசவம்,பாம்பு கடி உள்ளிட்ட ஆபத்து நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் உதவ முடியாத சூழல் ஏற்படுகிறது. தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு பல்வேறு காலங்களில் விடுமுறைகள் அளிக்கப்படுவதால் போதிய ஓட்டுனர்கள் இன்றி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே தமிழக அரசு கூடுதலாக ஆம்புலன்ஸ்களையும், தேவைக்கேற்ற ஓட்டுனர்களையும் பணியமர்த்த வேண்டும். இதுகுறித்து அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்து வருகிறோம்.ஆனால் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே காரணம் என பொய்ச்செய்தி பரப்பப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனமும் எந்தவித சட்ட விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. தொழிலாளர் நீதிமன்றங்களின் ஆணைகளை தொழிலாளர் ஆணையர்கள் அமுல் படுத்துவதில்லை. தொழிலாளர் நலனுக்கு விரோதமாக செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக சுகாதாரத் துறை செயல்படுகிறது. இதனைக் கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஈடுபட உள்ளனர்” எனக் கூறினார்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1353 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. இதில் 900 ஆம்புலன்ஸ் மட்டுமே இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)