
தமிழக அரசால் 2013-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள், கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாகக் குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.-க்கள், சட்டப்பேரவைக்குள் 2017-ஆம் ஆண்டு குட்கா பொட்டலங்களைக் கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக, பேரவைத் தலைவர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், சட்டப்பேரவை உரிமைக் குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்களும் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் வழக்கு தொடர்ந்தனர். ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில், மற்றவர்கள் மீதான வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு விசாரித்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் 25-இல் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், 2017-இல் அனுப்பப்பட்ட நோட்டீஸில், நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால், அதை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், பேரவை உரிமைக்குழு விருப்பப்பட்டால், புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு இராண்டாவது முறையாக செப்டம்பர் 07ஆம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. அதன் முடிவின்படி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்க உள்ள செப்டம்பர் 14-ஆம் தேதியன்று பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் மனுவில், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தங்களைப் பங்கேற்க விடாமல் தடுப்பதற்காகவும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தடுக்கும் வகையிலும், உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.