Advertisment

பெரும்பான்மை மக்களால் அல்ல, 31 விழுக்காடு மக்களால்தான் மத்தியில் ஆட்சிக்கு வந்தது பாஜக மோடி அரசு! வேல்முருகன்

velmurugan tvk 450.jpg

Advertisment

பெரும்பான்மை மக்களால் அல்ல, 31 விழுக்காடு மக்களால்தான் மத்தியில் ஆட்சிக்கு வந்தது பாஜக மோடி அரசு. அதனால்தான், மருத்துவப் பட்டமேற்படிப்பில் பெரும்பான்மை மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து பழிவாங்கியிருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, அம்மக்களே இதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதைச் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களாட்சி என்பது மக்களின் விருப்படி ஜனநாயக ஆட்சி நடத்துவதாகும். ஆனால் மோடி, மக்களின் விருப்பத்துக்கு மாறாக தன் விருப்பத்தையே மக்கள் மீது திணித்து ஆட்சி நடத்துகிறார்.

எனவே மோடியின் ஆட்சி,

மக்களாட்சி அல்ல; தான்தோன்றித்தனமான ஆட்சி!

ஜனநாயக ஆட்சி அல்ல; சர்வாதிகார ஆட்சி!

அதனால்தான் நாட்டின் பெரும்பான்மை மக்களான ”இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓபிசி)” மருத்துவப் பட்டமேற்படிப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறார்.

Advertisment

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 2006இல் இயற்றப்பட்ட ”மத்தியக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு சட்டம்”, ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்கள் யாவற்றிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது.

மருத்துவப் படிப்பில் ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது சட்டம்.

ஆனால் மருத்துவப் பட்டமேற்படிப்பில் ஒன்றியத் தொகுப்புக்கு மாநிலங்கள் அனுப்பும் 50 விழுக்காடு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் ரத்து செய்துவிட்டார் மோடி.

இந்த 50 விழுக்காடு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 15% விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு என மொத்தம் 49.5 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீட்டிற்கானதாகும்.

ஆனால் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்குமான இடங்களை மறுக்காமல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களை மட்டும் ரத்து செய்திருக்கிறார் மோடி.

இதில் மோடியின் பச்சை நயவஞ்சகம் ஒளிந்திருப்பதையே குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

பிற்படுத்தப்பட்ட மக்களை பழிவாங்கியதல்லாமல், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு இந்த மூன்று சாராருக்கிடையிலும் பிளவை ஏற்படுத்துவதே மோடியின் கெட்ட எண்ணமாகும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததால் அவர்கள் சுமார் 2,500 மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்களுக்குரிய இந்த 2,500 இடங்களைப் பறித்து, அவற்றை முன்னேறிய வகுப்பாருக்கே வழங்கி சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பப்பார்க்கிறார் மோடி.

இதைப் பெரும்பான்மை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி இதை வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு முன், பாரபட்சமான தன் பழிவாங்கல் முடிவை மோடி வாபஸ் பெற்று, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டை முன்பிருந்தபடி நீடிக்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.

Narendra Modi velmurugan tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe