Skip to main content

கள்ளச்சாராயம் அல்ல; விஷச் சாராயம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி; டிஜிபி அறிக்கை

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

“Not counterfeit; The shock revealed in the investigation of villuppuram issue; DGP report

 

விழுப்புரம் மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச் சாராயம் என்பதும் தெரியவந்தது.

 

இந்த மெத்தனால் என்ற விஷச் சாராயம் ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் முத்து என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும், முத்து பாண்டிச்சேரி ஏழுமலை என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுபோல சித்தாமூர், பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச் சாராய விற்பனை செய்த 'அமாவாசை' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் ஓதியூர் வேலு, அவர் தம்பி சந்திரன் என்பவரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். வேலு என்பவர் பனையூர் ராஜேஷ் என்பவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார்.

 

இவர் மேற்படி விஷச் சாராயத்தை விளம்பூர் 'விஜி' என்பவரிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜி, விஷச் சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார். ஆக சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச் சாராயமும், மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச் சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது எனப் புலனாகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,40,649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,39,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37,217 லிட்டர் விஷச் சாராயம் கைப்பற்றப்பட்டு, 2957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச் சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்து மெத்தனால் என்ற விஷச் சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது" என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.